பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடை கால வன விலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது.
இதில், பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப் உள்ளிட்ட 4 வனச்சரகங்களில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பும், மே மாதத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பும் என 2 கட்டமாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பானது நேற்று முன்தினம் அட்டகட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் பயிற்சியுடன் தொடங்கியது. நேற்று முதல் களப்பணி தொடங்கியது.தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கணக்கெடுப்பு பணிகள் 8 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை அதற்கான பயிற்சி வகுப்புகள் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் நடந்தது. பயிற்சியில் பங்கேற்ற வனத்துறை ஊழியர்கள், நேற்று களப்பணியில் ஈடுபட்டனர். வரும் 17ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 32 இடங்களில் 62 நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு களப்பணிகள் தொடரப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் வனச்சரகர் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர், வனவர், வனக்காப்பாளர், தன்னார்வலர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல இடங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் கால் தடம் இருப்பதை அறிந்து அதனை ஆய்வு செய்தனர். அதுபோல், டாப்சிலிப்பை சுற்றியுள்ள வனப்பகுதியில், வனச்சரகர் முன்னிலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
அப்போது, வனத்துறையினர் யானை நேரில் பார்த்து கணக்கெடுத்தனர். மேலும், பல இடங்களில், கண்ணில் தென்பட்ட யானைகளின் கால் தடம், சாணம் போன்றவற்றை கொண்டும், அங்கு யானைகள் நடமாட்டம் உள்ளது என்பதையறிந்து கணக்கெடுத்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வனச்சரகங்களில், நேற்று துவங்கப்பட்ட கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணியானது, வரும் 17ம் தேதி வரை நடைபெறும் என்றும். அந்தந்த வனச்சரகங்களில் 5 குழுவினர் தனித்தனியாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.