சென்னை: தமிழகத்தில் உள்ள அத்துணை ஆன்மிக தலங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குளியலறைகள், கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ராமேஸ்வரம், பழனி, திருச்செந்தூர், மதுரை , ஸ்ரீரங்கம், கும்பகோணம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாதம்தோறும் வருகின்றனர். இது தவிர அந்தந்த கோயில்களுக்கென்று இருக்கின்ற விசேஷங்கள், விழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகும்.