சென்னை: “தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?” என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாகர்கோயில் தீயவிப்பு நிலையத்தில் தீயவிப்பு வீரராக பணியாற்றி வந்த, நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஆரல்வாய்மொழி அருகே தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கருப்பசாமியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.