சென்னை: ஆன்லைன் ரம்மி வழக்கு தொடர்பாக ஒன்றிய – மாநில அரசுகள் பதிலளிக்க 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது.
அதேசமயம், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இந்த விதிகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எகஸ்பர்ட் ப்ளேயர்ஸ் சங்கம் உள்ளிட்டவை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ஒன்றிய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது
இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 21-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர். மேலும் 17-ம் தேதி முதல் விசாரணை துவங்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post ஆன்லைன் விளையாட்டு வழக்குகளில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர அவகாசம் வழங்கியது சென்னை ஐகோர்ட் appeared first on Dinakaran.