காஷ்மீர்: தீவிரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தீவிரவாதிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை செய்தி என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை இரவு இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் சென்றார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். எல்லை நிலவரம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியர்களுக்கு பேட்டி அளித்தார்
நிதியுதவி கேட்டு உலக நாடுகளிடம் கெஞ்சி வருகிறது பாகிஸ்தான்; ஆனால் இந்தியா மற்ற நாடுகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் என ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது. எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது; தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுதான் பெரியது என்று கூறியுள்ளார்.
The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.