புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகள் மூலம் நடத்தி முடிக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால், மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்: நடந்தது என்ன? – ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்ட தகவல்கள்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது 2025 ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானியரும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேரை அவர்கள் படுகொலை செய்தனர். 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் மிகப் பெரிய எண்ணிக்கையில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு இந்த தாக்குதல் காரணமானது.
மிக நெருக்கமாக, குடும்பத்தினர் கண்முன்னே பெரும்பாலும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள பஹல்காம் தாக்குதல் சம்பவம் மிக கொடூரமான காட்டுமிராண்டி செயலை குறிப்பதாக இருந்தது. இந்தத் தாக்குதல் பற்றிய செய்தியை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன், கொல்லப்பட்ட முறையால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமென்றே அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெளிவாக தெரிகிறது.