பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஒருநாள் விடுமுறை எடுத்தால், சனி, ஞாயிறு சேர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பிருப்பதால், இந்த முறை விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கும் அதே அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு இருக்கைக்கு ரூ.3000, படுக்கை வசதிக்கு ரூ.4000 அளவுக்கு டிக்கெட் விற்பனையாகிறது. திருச்சிக்கு ரூ.2500 கட்டணம் வசூலிக்கின்றனர். கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக் கும் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொங்கலைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் இளைஞர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.