புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவுத் தலைவராக முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜும், கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா பஞ்சாப் மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சந்தித்தத் தோல்வியைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடந்தது. அக்கூட்டதில் இந்த மாற்றங்களுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவராக இருந்த கோபால் ராய்க்கு பதிலாக அப்பதவிக்கு சவுரப் பரத்வாஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மணீஷ் சிசோடியா பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பாளராக மாறுகிறார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் அது என்பது குறிப்பிடத்தக்கது.