புதுடெல்லி: முந்தைய ஆம் ஆத்மி அரசு, பொது கருவூலத்தை காலியாக விட்டுச்சென்றுள்ளது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பெண்களுக்கான ரூ.2,500 மாதாந்திர உதவித்திட்டம் விரிவான திட்டமிடலுடன் அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. இந்தநிலையில், இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பிற பாஜக எம்எல்ஏக்களுடன் முதல்வர் ரேகா கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் மகளிருக்கான உதவி திட்டத்தை செயல்படுத்துவது குறித்த திட்டமிடல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரேகா குப்தா, "டெல்லியில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கும் மகிளா சமிரித்தி திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.