ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், டால்பின், பென்குயின், மீன், நத்தை போன்ற கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு கோடை விடுமுறையின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் நடத்தப்படும்.
அதன்படி, கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடந்து முடிந்த நிலையில், நேற்று கூடலூரில் வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி துவங்கியது. இது மூன்று நாட்கள் நடக்கிறது. இந்நிலையில் இன்று ஊட்டி ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் இந்த ரோஜா காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 20 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு டால்பின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல ஆயிரம் ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு சிப்பி, நத்ைத, மீன், பென்குயின் உட்பட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் வடிவங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இது தவிர வெளி மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களை மேற்கொண்டுள்ளனர். ரோஜா இதழ்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மற்றும் ரங்கோலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவில் உள்ள 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம்.
ரோஜா கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி ரோஜா பூங்கா மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இன்று காலை முதலே ரோஜா கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
The post ஆயிரக்கணக்கான மலர்களால் டால்பின், பென்குயின் உருவங்களுடன் ஊட்டியில் ரோஜா கண்காட்சி துவங்கியது appeared first on Dinakaran.