சென்னை: சென்னையில் 2 வழித்தடங்களுக்கு புதிய விரிவான மினிபேருந்து ஆவணங்களை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மினி பேருந்து இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று இணைப் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை 2 வழித்தடங்களுக்கு புதிய விரிவான மினி பேருந்து திட்டம், 2024ன் கீழ் சென்னை மாவட்ட அரசிதழின்படி சென்னை வடக்கு சரக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2 வழித்தடங்களுக்கும் மற்றும் சென்னை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2 வழித்தடங்களுக்கும் மொத்தம் 4 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெற அறிவிக்கை வெளியிடப்பட்டது.
வழித்தடங்களின் விவரங்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை-கொளத்தூர் வழித்தடம்-1 மாதவரம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் – மாதவரம் பேருந்து நிலையம், வழித்தடம்-2 மாதவரம் பேருந்து நிலையம்- மாதவரம் பழைய எம்.டி.சி பேருந்து நிலையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (வடகிழக்கு) தண்டையார்பேட்டை வழித்தடம்-3 விம்கோ மெட்ரோ பணிமனை நிறுத்தம்-சத்துவா கேட் பொன்னேரி சாலை,
வழித்தடம்-4 காலடிப்பேட்டை மெட்ரோ பேருந்து நிறுத்தம் – சுனாமி குடியிருப்பு, சென்னை மாவட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை, வடக்கில் 2 வழித்தடங்களுக்கு (ஒரு வழித்தடத்திற்கு 2 விண்ணப்பங்கள் வீதம்) 4 விண்ணப்பங்களும், சென்னை, வடகிழக்கில் 2 வழித்தடங்களுக்கு (ஒரு வழித்தடத்திற்கு 2 விண்ணப்பங்கள் வீதம்) 4 விண்ணப்பங்களும், மொத்தம் 8 விண்ணப்பங்கள் பெறப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு செயல்முறை ஆணை சென்னை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்த செயல்முறை ஆணையை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரர்கள் நடப்பில் உள்ள அனைத்து ஆவணங்களையும் வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பித்து புதிய மினி பேருந்து இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டமானது வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ஆர்டிஓ அலுவலகங்களில் ஏப்.30க்குள் ஆவணம் சமர்ப்பித்து புதிய மினிபேருந்து இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்: இணை போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.