சென்னை: “பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு யூனிட் ரூ.2650 என்ற விலையை அடிப்படை விலையாக வைத்து ஆற்றுமணலை ஆன்லைன் முறையில் ஏலத்தில் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆற்று மணல் தனியார் மூலம் விற்பனை செய்யப்பட்டால் அரசுக்கு வருமானம் கிடைக்காது என்பது மட்டுமின்றி, பொதுமக்களும் மிக அதிக விலை கொடுத்து மணலை வாங்க வேண்டியிருக்கும். அதனால், இந்த நடைமுறை அரசுக்கோ, மக்களுக்கோ பயனளிக்காது.