ஆலங்காயம்: ஆலங்காயம்-ஜம்னாமரத்தூர் இடையே சாலையில் ஒற்றை யானை சுற்றித்திரிந்தது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனால் அச்சமடைந்தனர். இதையறிந்த வனத்துறையினர் வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருக்கும் யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகே உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. இவ்வாறு வரும் விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. ஆடு, மாடுகளை தாக்கி கொன்றுவிடுகிறது. மனிதர்களையும் தாக்குகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒற்றை யானை ஒன்று திடீரென தற்போது நடமாடி வருகிறது.
அதன் விவரம்; திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்-திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் இடையே உள்ள சாலையில் நேற்று மாலை வாகன ஓட்டிகள் வழக்கம்போல் தங்களது பணிக்காக வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒற்றை யானை அந்த சாலையில் நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திக்கொண்டனர். நீண்ட நேரமாகியும் அந்த ஒற்றை யானை அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே நின்றிருந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆலங்காயம் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலையில் நின்றிருந்த யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் தங்கள் இடங்களுக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர், உணவை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி நீண்ட தூரம் பயணிக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்கிறது. இதனை தடுக்க வனப்பகுதியின் நடுவில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் வைத்து தண்ணீர் நிரப்பி வருகிறோம். இருப்பினும் விலங்குகள் உணவுக்காக இதுபோன்று காடுகளில் இருந்து வெளியேறிவிடுகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
The post ஆலங்காயம்-ஜம்னாமரத்தூர் இடையே சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை : வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.