சென்னை: சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான மூன்று நாள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிவித்திருப்பது அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. தமிழக அரசியல் களத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற நாக்பூர் குரு பீடத்தின் சேவகர்களாக செயல்படும் ஆளுநர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் துணை வேந்தர்கள் மாநாட்டை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஆரம்ப நாளில் இருந்தே மக்களால் தேர்வு செய்து, அமைக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றாமல், மக்கள் நலனுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தும் மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தமிழக சட்டப் பேரவையின் மாண்புக்கும், மரபுக்கும் தீராதக் களங்கம் ஏற்படுத்தும் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறார்.