சென்னை: மாநிலங்களின் அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டே ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புக்கு முரணாக உள்நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழக்கில் 415 பக்கத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக அந்த மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோரும், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மத்திய அரசு சார்பிலும் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: அரசியலமைப்பு பிரிவு 200ன் கீழ் ஆளுநர் எந்த மாதிரி நடவடிக்கை எடுக்க முடியும்?. மாநில அரசு நிறைவேற்றம் மசோதாவை ஆளுநர் பரிசீலிக்காமல் நேரடியாக ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்ப முடியுமா?. ஆளுநர் மசோதாவை பரிசீலிக்க கால நிர்ணயம் உள்ளதா?. மாநில அமைச்சரவை அறிவுறுத்தலின் அடிப்படையில் கொண்டு வரப்படும் சட்ட பூர்வ நடவடிக்கை மீது ஆளுநர் எந்த விதமாக செயல்பட முடியும்?. ஆளுநரின் முடிவு நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதா?. அரசியலமைப்பு பிரிவு 201ன் கீழ் மசோதா மீது ஜனாதிபதி முடிவெடுப்பதற்காக ஆளுநர் அந்த மசோதாவை நிறுத்திவைக்க முடியுமா?.
அரசியலைமைப்பு உருவாக்கப்பட்டபோது ஆளுநர் அரசியலமைப்பின் தலைவராகவும் அமைச்சரவைக்கு ஆலோசனை கூறுபவராகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஆளுநர் அதற்கு நேர் மாறாக இருக்கிறார். பொதுமக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு அரசு ஆளுநரை நடவடிக்கை எடுக்க அரசியலமைப்பு பிரிவு 32ஐ பயன்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர் அந்த மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைத்துள்ளார். இதன் மூலம் அவர் தனது கடமையை செய்யவில்லை என்றுதான் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
நீண்டகால சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் மசோதா, தமிழ்நாடு அரசு பணிகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார். கடந்த 2020 ஜனவரி 13 மற்றும் 2023 ஏப்ரல் 28ம் தேதிகளில் தமிழ்நாடு சட்ட பேரவையில் 12 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மசோதாக்களை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திரும்ப அனுப்பியுள்ளார். இதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குமாறு உத்தரவிடக்கோரியும்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் 12 மசோதாக்களையும் பரிசீலிக்காமல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிறுத்திவைத்ததுடன் அவற்றை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே அனுப்பியுள்ளார். இதையடுத்து, 2023 நவம்பர் 18ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவற்றை ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார். மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருந்த நிலையில் இந்த நீதிமன்றம் 2023 டிசம்பர் 1ம் தேதி மசோதாக்கள் குறித்து ஆளுநரின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
ஆனால், மசோதாவை நிறுத்திவைத்ததற்கு எந்த காரணத்தையும் கூறாமல் ‘எனது ஒப்புதலை நிறுத்தி வைத்துள்ளேன்’ என்று மட்டும் தெரிவித்துள்ளார். இது அரசிலமைப்பு அவருக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் உள்நோக்கத்துடன் செயல்பட்டதை காட்டுகிறது. இந்த நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 2023 டிசம்பர் 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், 2023 டிசம்பர் 30ம் தேதி ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் நிலுவையில் உள்ள 12 மசோதாக்களை பரிசீலித்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
ஊழலில் ஈடுபடும் அரசு மற்றும் பொது ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான குறிப்பாக தஞ்சாவூர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.பாஸ்கரன், முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பி.வி.ரமணா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்ற வழக்கு தொடர்பான மசோதாக்களையும் ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்கவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டு பதவி இடம் காலி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, அவரை மீண்டும் அமைச்சராக்க முதல்வர் கடிதம் எழுதியபோது அதற்கும் ஆளுநர் மறுத்துள்ளார். இதே நடைமுறையைத்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி விஷயத்திலும் ஆளுநர் கடைபிடித்துள்ளார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காகத்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிடும்போது, தமிழ்நாடு ஆளுநர் வெளிப்படையாகவே அரசியலமைப்பு எதிராக தவறு செய்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்ப மசோதாக்களை நிறுத்திவைத்தது அரசியலமைப்புக்கு எதிரானது.
ஆளுநர் தனது கடமையை செய்ய தவறினால் அதில் நீதிமன்றம் தலையிட முடியும். அமைச்சரவையின் அறிவுறுத்தலை ஆளுநர் கேட்டு அதன் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும். முதலமைச்சரை மீறி ஆளுநர் செயல்பட முடியாது என்று அரசியலமைப்பு பிரிவு 163(1)ல் தெளிவுபடுப்பட்டுள்ளது. சட்ட பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது. அரசியலமைப்பு பிரிவு 200ல் விரைவில் “எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு சீக்கிரம் ஒப்புதல் தரவேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று வாதிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆஜராகி வாதிட்டுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்கிவி ஆகியோர் எடுத்துவைத்த வாதத்தில் கூடுதலாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எடுத்துரைத்த வாதங்களை இந்த நீதிமன்றம் பதிவு செய்கிறது. ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி வாதிடும்போது, ஆளுநர் அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள அதிகாரத்தின்படிதான் செயல்பட்டுள்ளார். அரசிலமைப்பு பிரிவு காரணங்களின் அடிப்படையிலேயே மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளார். ஆனால், அவர்களுக்கு தரப்பட்ட அதிகாரத்தை மீற முடியாது என்றார்.
உரிய காரணங்கள் இல்லாமல் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் நீதிமன்றம் தனது அதிகாரத்தை காட்டாமல் இருக்க முடியாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என்றால் சம்மந்தப்பட்ட மாநில அரசுக்கு உரிய காரணங்களுடன் மசோதாக்களை திரும்ப அனுப்ப வேண்டும். மாநில அரசும் மத்திய அரசுடன் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அரசியலமைப்பு தலைவராக பதவி வகிக்கும் ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கோட்பாடுகளின்படியே நடக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி அதிகாரம் உள்ளதாக கருதக்கூடாது.
அரசியலமைப்பு பிரிவு 201ன் கீழ் ஜனாதிபதி தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களை பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அந்த மசோதா கொண்டு வந்ததன் நோக்கம் நீர்த்துபோகிவிடும். பிரிவு 201ன் கீழ் ஜனாதிபதி தேவையில்லாமல் காலதாமதம் செய்ய கூடாது. எனவே, மசோதாக்களை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். பேரறிவாளன் விடுதலை வழக்கிலும் ஆளுநர் முடிவெடுக்காமல் நீண்ட நாட்கள் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிறுத்திவைத்து பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கான அனுப்பிவைத்தார்.
ஆளுநரின் இந்த செயலற்ற தன்மையை இந்த நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு ஆய்வு செய்து அரசின் முடிவை உறுதி செய்துள்ளது. நீண்ட காலதாமதத்திற்கு ஆளுநர்களின் செயலற்ற தன்மையை காரணமாக உள்ளது. அதனால்தான் அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு தந்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கிறது. சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரால் அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டு எந்த மாற்றமும் செய்யப்படாமல் மீண்டும் அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டால் அந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஆளுநர் நிறுத்திவைக்க கூடாது.
மாநில அரசின் ஆட்சி காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் மக்களுக்கு நன்மை தரும் மசோதாக்கள் அரசுகள் நிறைவேற்றும்போது அதற்கு ஆளுநர்கள் ஒப்புதல் தருவது தேவையாகிறது. அப்படி இல்லாமல் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு அந்த மசோதாக்களுக்கு உயிர் கொடுத்தால் அது தேர்தல் நேரத்தில் பேசுபொருளாகிவிடும். இது அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். எனவே, மாநில அரசு அனுப்பும் மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர்கள் அனுப்ப வேண்டும். மசோதா குறித்து மாநில அமைச்சரவையின் அறிவுத்தலில் ஏதாவது முரண்பாடு இருந்தால் அந்த மசோதாவுக்கு எதற்காக ஒப்புதல் தரவில்லை என்ற தகவலுடன் 3 மாதங்களுக்கும் மாநில அரசுக்கு ஆளுநர் திரும்ப அனுப்ப வேண்டும்.
அமைச்சரவையின் அறிவுறுத்தலுக்கு முரணாக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநர் முடிவெடுத்தால் அந்த மசோதாவை அதிக பட்சம் 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்கலாம். ஆளுநரால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதை ஜனாதிபதி பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் சம்மந்தப்பட்ட மாநிலம் நீதிமன்றத்தை அணுகலாம். ஒரு மசோதா திரும்ப அனுப்பப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அந்த மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்.
ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரைகளின்படியே செயல்பட வேண்டும் என்பது பொதுவான விதி. இதை உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சிறப்பு போலீஸ் வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, அரசியலமைப்பு பிரிவு 200க்கு முரணாக தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநர் நிறுத்திவைத்தது ரத்து செய்யப்படுகிறது. இந்த மசோதாக்கள் தொடர்பாக ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது. கடந்த 2023 நவம்பர் 18ம் தேதி தமிழ்நாடு அரசு மறு பரிசீலனைக்கு அனுப்பிய 10 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
* ஆளுநர் முடிவெடுக்காமல் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் சம்மந்தப்பட்ட மாநில அரசு நீதிமன்றத்தை அணுக முடியும்.
* மாநில அரசுகள் கொண்டுவரும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் அந்த மசோதாக்களை கொண்டு வந்ததன் நோக்கம் நீர்த்துபோய்விடும்.
* அரசியலமைப்புக்கு எதிராக அதிகாரிகள் வேண்டுமென்றே செயல்பட்டால், அது மக்களால் இந்த நாடு கட்டமைக்கப்பட்டதன் அடிப்படையையே பாழ்படுத்திவிடும்.
* சட்டமும், விதிகளும்தான் மக்களை பழமையிலிருந்து மாற்றி அவர்களை மேன்மையடைய செய்கிறது. சட்டத்தின் அடிப்படை நோக்கமே மக்களின் நலன்தான். அதன் புனிதமும், பாதுகாப்பும் முக்கியமானது.
* ஆளுநர்தான் மாநிலத்தின் அரசியலமைப்பு தலைவர். அதனால், அரசியல் காரங்களுக்காக மாநில சட்டங்களுக்கு எந்த இடர்பாடுகளையும் ஏற்படுத்தாமல் அவர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
The post ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை: அமைச்சரவையின் முடிவுக்கு உட்பட்டே செயல்பட முடியும்; தமிழ்நாடு மசோதாக்கள் வழக்கில் 415 பக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம் appeared first on Dinakaran.