ஊட்டி: ஆளுநர் அழைத்து உள்ள துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் துணைவேந்தர்கள் உள்ளனர். இதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதால் துணை வேந்தர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. பல்கலை துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதேபோல், கல்வித்துறையில் பல குழப்பங்களை ஆளுநர் விளைவித்து வந்தார். இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசு சார்பில் பல்கலை வேந்தராக மாநில முதல்வர் இருப்பார் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால் உச்ச நீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.
இந்த தீர்ப்பின் மூலம் மாநில முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வரே வேந்தராக இருப்பார் என்று அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின் ஒன்றிய அரசின் அவசர அழைப்பின்பேரில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இதன் பின், உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், தானே வேந்தராக தொடர்வதாக கூறி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் வரும் 25, 26 ஆகிய இரு நாட்கள் தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நடக்கும் என்று ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்து உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி 24ம் தேதி சென்னையில் இருந்து ஊட்டி வருகிறார். துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் 25ம் தேதி வருகிறார். அவர்கள் 27ம் தேதி வரை ராஜ்பவன் மாளிகையில் தங்குகின்றனர்.
இவர்கள் 25, 26 ஆகிய இரு நாட்கள் நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது மட்டுமே தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. துணை ஜனாதிபதி மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஊட்டி வருவதை முன்னிட்டு ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வேந்தராக முதல்வரே தொடர்கிறார்.
ஆனால், வேந்தர் நான் தான் என்று கூறி துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்து உள்ளார். ஆளுநர் கூட்டி உள்ள மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்றால் அவர்களை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மாநாடு கூட்டப்பட்டுள்ளதால், பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்து உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் பங்கேற்பதா? வேண்டாமா? என்று துணை வேந்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
* ஊட்டியில் 25ம் தேதி முற்றுகை போராட்டம்
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பையும், தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் மீறி, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருகிற 25-04-2025 அன்று கூட்டி உள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கை, உச்சநீதிமன்றத்தையும், தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயல். எனவே, ஆளுனர் ஆர்.என்.ரவியின் அடாவடி நடவடிக்கையை கண்டித்தும், அவரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிற 25ம்தேதி காலை 10 மணிக்கு ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ள தமிழகம் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
The post ஆளுநர் அழைத்து உள்ள மாநாட்டில் பங்கேற்கலாமா? வேண்டாமா? சட்ட சிக்கல்கள் உள்ளதால் துணை வேந்தர்கள் குழப்பம்: உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலால் தயக்கம் appeared first on Dinakaran.