சென்னை: ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டமாக அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசிதழில் நேற்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப முடிவு செய்த தமிழக அரசு, துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்கள் கிடப்பில் வைத்து இருந்தார். பின்னர் தன்னிடம் 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து, 2020ம் ஆண்டில் இருந்து நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவர் தாமதிப்பதாகவும் கூறி, 2023ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 8ம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதாக்கள் விவரம்:
1. பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதா
2. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா
3. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
5. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா
6. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
7. தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
8. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மசோதா
9. அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
10. புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா.
இப்படி 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பது தவறான நடவடிக்கையாகும். இதில் பெரும்பாலானவை, பல்கலைக்கழங்கள் தொடர்பானவை. தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்து கடந்த 8ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட ஆளுநருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் நகலை தமிழ்நாடு அரசு அரசிதழில் நேற்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு செயலாளர் சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் நேற்று வெளியிட்ட அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: அரசிதழில் வெளியீடு சட்டம் – பாகம் – 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாவது திருத்த) சட்ட முன்வடிவு (சட்டமன்ற பேரவை சட்ட முன்வடிவு எண் 48/2022) – தமிழ்நாடு சட்டம் 10/2024 என வெளியிட ஆணையிடப்பட்டது 18.11.2023 அன்று ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுகிறது என்ற அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படுகிறது. (அரசு ஆணை நிலை எண் 86 சட்ட துறை 2005, பங்குனி 28. குரோதி. திருவள்ளுவர் ஆண்டு-2056.)
படிக்கப்பட்டது:
1. அரசாணை (நிலை) எண்.315 சட்டத்துறை தேதி 7.3.2024
2. 8.4.2025 தேதியிட்ட நீதிப்பேராண்மை பில் எண்.1239/2023-ல் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள், பின்வரும் அறிவிக்கை 1804.2025 தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்படுகிறது. 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாவது திருத்தச்) சட்ட முன்வடிவு (சட்டமன்ற போவை சட்ட முன்வடிவு எண்.48/2) அக்டோபர் 2022 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமுன்வடிவிற்கு 13 நவம்பர் 2023 அன்று ஆளுநர் இசைவளிக்க மறுத்து திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து தமிழக முதல்வர் 19.11.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் அதே சட்டதிருத்த மசோதா எந்தவித மாறுதலுமின்றி சட்டமன்றப் பேரவையில் மீண்டும் இயற்றப்பட்டது என்பதாலும் மற்றும் கூறப்பட்ட சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண் 48/2022 18.11.2023 அன்று ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு, அந்தச் சட்டமுன்வடிவை 28.11.2003 அன்று குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பியிருந்தார். குடியரசு தலைவர் கூறப்பட்ட சட்டமுன்வடிவிற்கு 18.2.2024 அன்று ஒப்புதல் வழங்கி 7.3.2004 தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி Vல் தமிழ்நாடு சட்டம் 10/2024 வெளியிடப்பட்டு மேற்கூறிய தேதியன்று, அதாவது, 7.1.2024 அன்று நடைமுறைக்கு வந்து விட்டது என்பதாலும், 18.11.2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மற்றும் உச்ச நீதிமன்றம் நீதிப்பேராணை மனு எண் 1239/2023 8.4.2025 தேதியிட்ட அதன் ஆணையில் மேற்கூறிய சட்டமுன்வடிவை குடியரசு தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்பியது தவறு.
எனவே, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட நாளில் அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. எனவே தற்போது 8.4.2025 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய ஆணையின் அடிப்படையில் கூறப்பட்ட சட்டமன்ற பேரவை சட்டமுன்வடிவு எண்.48/2022 ஆனது தமிழ்நாடு ஆளுநரால் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும். இது உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்படுகிறது.
மேலும், இந்த சட்ட திருத்தத்தின்படி, பல்கலைக்கழகத்தில் ‘வேந்தர்’ என்று பயன்படுத்தி வந்த இடங்களில் இனி ‘அரசு’ என்ற சொல் மாற்றப்படும். அதுமட்டுமின்றி ‘அவர்’ என்று பயன்படுத்தி வந்த இடங்களில் ‘அவர்கள்’ என்ற சொல் மாற்றப்படும். மேலும் துணைவேந்தரை நேரடியாக அலுவலக உத்தரவுபடி நீக்கம் செய்யமுடியாது, துணைவேந்தர் தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என குற்றசாட்டு வந்தால் அந்த குற்றச்சாட்டை தமிழக அரசு (நீதிபதி அல்லது அரசு உயர் அதிகாரி) விசாரிக்கும். அதனை தொடர்ந்து தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இனி பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் செயல்படுவார் என்ற வரலாற்று தீர்ப்பு அமலுக்கு வந்துள்ளது. சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை முதல்வருக்கு பெற்று தந்தவர், அப்போது முதல்வராக இருந்த கலைஞர். இன்று அளவிலும் எல்லா மாநிலத்திலும் முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர். அதேபோல தற்போது நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதற்கும், வேந்தர் பதவி முதல்வருக்கு தான் என்பதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்ற வரலாறு தற்போது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டமானது: ‘வேந்தர்’ என்பதற்கு பதில் ‘அரசு’ என மாற்றம்; தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.