சென்னை: “திமுக ஆட்சியில் ஆளுநர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறிவிட்டது. இந்த உரை காண்பதற்கு காற்றடைத்த பலூன் போன்று பெரிதாக உள்ளதே தவிர, உள்ளே எதுவும் இல்லை. ஆளுநர் உரை சபாநாயகர் உரையாக காட்சியளிக்கிறது. திமுக அரசுக்கு சுய விளம்பரத்தை தேடித் தருவதைவிட, இந்த உரையில் வேறு எதுவும் இல்லை.” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (ஜன. 6) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக தமிழில் வாசித்தார்.