சென்னை: “நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது. மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான்” என்று திமுக சட்டத் துறை மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் திமுக சட்டத் துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது: “இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரே நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.