தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த விவகாரம் நீதிமன்றம் சென்று, உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலைஇதன்மூலம் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்யவிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் தமிழக உயர் கல்வித் துறைக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், மாநில அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களில் 30 நாட்களுக்குள் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்றும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது அவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.