இந்தாண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையைப் படிக்காமல் கோபித்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதில் இருந்தே திமுக தலைவர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்து விட்டது.
ஆளுநரின் செயலுக்கு திமுக-வின் கண்டனம், ஆளுநரின் ‘ட்வீட்’, முதல்வரின் விமர்சனம், ஆளுநரின் பதில், அமைச்சர்களின் ஆவேச அறிக்கைகள் என மோதல் போக்கு நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. இருதரப்பிலிருந்தும் சிறுபிள்ளைத்தனம், ஆணவம், வெட்கக்கேடானது, கைக்கூலி, தன்னிலை மறந்துவிட்டாரா, அவமானச்சின்னம், திமிர் போன்ற வார்த்தை பயன்பாடுகள் ஒரு மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவை அளவுகடந்து மோசமடையச் செய்துள்ளது.