சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நேற்று நள்ளிரவு இளம் பெண் தொழிலதிபர் ஒருவர் மது போதையில் தனது சொகுசு காரை சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக இளம் பெண் காயங்கள் இன்றி உயிர்தப்பினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே நேற்று நள்ளிரவு கருப்பு கலர் சொகுசு கார் ஒன்று நட்சத்திர ஓட்டலில் இருந்து வந்தது. சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி இருந்ததால், சொகுசு கார் அதிவேமாக வந்தது. ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து தனியார் மருத்துவமனை அருகே உள்ள சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதை பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்த போது, இளம் பெண் ஒருவர் மது போதையில் காரை இயக்கி வந்தது தெரியவந்தது. நல்வாய்ப்பாக இளம் பெண் சொகுசு கார் என்பதால் காயங்கள் இன்றி உயிர்தப்பினார். உடனே சம்பவம் குறித்து பண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த போதையில் இருந்த இளம் பெண்ணை மீட்டனர்.
இளம் பெண் போதையில் இருந்ததால், போலீசார் அவரை உடனே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்த பெண் தொழிலதிபர் என தெரியவந்தது. இளம் பெண் என்பதால் அவரது பெயரை போலீசார் வெளியே சொல்ல மறுத்துவிட்டனர். அதைதொடர்ந்து விபத்துக்குள்ளான சொகுசு காரை போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆழ்வார்பேட்டையில் நள்ளிரவு போதையில் தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதி விபத்து ஏற்படுத்திய பெண் தொழிலதிபர்: நல்வாய்ப்பாக உயிர்தப்பினார் appeared first on Dinakaran.