ஆவடி : ஆவடி மாநகராட்சியில் சேதமான நிலையில் உள்ள பேனர்களால விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.கோடை வெயில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் அனல் காற்று வீசுவதால், உறக்கமின்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை ஆவடி பகுதியில் திடீரென்று பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றுடன் திடீர் மழை பெய்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக பட்டாபிராம், ஜெ.ஜெ நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
ஆவடி திருமலைராஜபுரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதில் ராட்சத பேனர் ஒன்று கிழிந்து தொங்கியது. அந்த பேனர் சாலையில் பறந்து அருகில் உள்ள மின் வடத்தில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல், ஆவடி மற்றும் பருத்திப்பட்டு செக் போஸ்ட்டிலும் ராட்சத பேனர் கிழிந்து பறந்தது.
ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சாலையில், விளம்பர தட்டிகள் சரிந்து கிடந்தன. ஆவடி பருத்திப்பட்டு, பஜனை கோவில் தெரு எதிரில், த.வெ.க. கட்சியினர் அமைத்திருந்த தண்ணீர் பந்தலில், கூரை காற்றில் அடித்துச் சென்றது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் இதற்கு அனுமதி அளித்தது ஏன்? பொதுமக்களின் உயிர் அவ்வளவு எளிதா? பட்டாபிராம் மேம்பாலம் முழுவதும் ஆங்காங்கே பெரிய கட்டிடங்களில் பதாகைகள் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. அனைத்து பதாகைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனுமதி அளித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post ஆவடி மாநகராட்சியில் சேதமான பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.