சிவகாசி: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி முறைகேடு தொடர்பாக, அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக, விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் கடந்த 2021 நவ. 15ல் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில், ராஜேந்திர பாலாஜி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய் நல்லதம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் விஜய் நல்லதம்பி புகார் அளித்தார்.
இதன்பேரில், ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவானது. இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 2022, ஜன. 5ல் கர்நாடக மாநிலத்தில் மாறு வேடத்தில் சுற்றிய ராஜேந்திர பாலாஜியை தமிழக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதன்பின் 3 ஆண்டுகளைக் கடந்த நிலையில், 2021 முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என ரவீந்திரன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதோடு, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது டெல்லி சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி முறைகேடு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.