புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க கடந்த ஆண்டு வேலையுடன் கூடிய ஊக்கத் தொகை (இஎல்ஐ) திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதற்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போனது?
நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களின் மீது மட்டுமே பிரதமர் மோடிக்கு கவனம் உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை மத்திய அரசு புறக்கணிக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இஎல்ஐ திட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக அறிவித்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டாகியும் அந்த திட்டம் குறித்து இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.