சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றில் லுங்கி இங்கிடிக்கு மாற்று வீரராக ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முஸரபானி. தற்போது இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர், அந்த அணியின் முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக் விக்கெட்டுகளை பிளெஸ்ஸிங் முஸரபானி வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பென் டக்கெட் 140, ஸாக் கிராவ்லி 124, ஆலி போப் 171 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முதல் இன்னிங்ஸில் 24.3 ஓவர்கள் வீசிய பிளெஸ்ஸிங் முஸரபானி, 143 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.