இந்திய கலாச்சாரம் மற்றும் இசையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இன்று (செப்டம்பர் 8) மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த, அசாதாரண திறன் வாய்ந்த இசைக்கலைஞர்களில் ஒருவரான டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் பிறந்த நாள் இன்று. இந்த ஆண்டு அவர் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் தொடக்க ஆண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.
அசாமில் இருந்து காலத்தால் அழியாத நதி போல ஒரு குரல் சீறிப் பாய்ந்து வெளிப்பட்டது. அந்தக் குரல் எல்லைகளையும் கலாச்சாரங்களையும் கடந்து, மனிதகுலத்தின் உணர்வைச் சுமந்து சென்றது. பூபேன் அண்ணா உலகம் முழுவதும் பயணம் செய்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் தோளோடு தோளாக இணைந்திருந்தார். ஆனால் அவர் அசாமில் தமது வேர்களுடன் ஆழமாகப் பிணைந்திருந்தார். அசாமின் வளமான வாய்மொழி மரபுகள், நாட்டுப்புற மெல்லிசைகள், சமூக ரீதியாகக் கதை சொல்லும்நடைமுறைகள் ஆகியவை அவரது ஆரம்பகால குழந்தைப் பருவத்தை நுட்பமாகவும் ஆழமாகவும் வடிவமைத்தன. இந்த அனுபவங்களே அவரது கலைத் திறனின் அடித்தளமாக அமைந்தன.