சென்னை: இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உத்தரவு பிறப்பிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டது, நீதிமன்ற அறையில் இருந்தவர்களை கலங்கச் செய்தது. கல்லூரியில் படித்த போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார் அந்த மாணவி. படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், அவரது வீடியோ ஒன்று இணையதளங்களிலும், ஆபாச வலைதளங்களிலும் வலம் வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோக்களை முடக்கி அவற்றை நீக்க வேண்டும். எதிர்காலத்தில் அது பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஒன்றிய அரசுக்கு புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்த காட்சிகளை நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், அந்த உத்தரவில், குடிமக்கள் அத்தனை பேரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.
இதேபோன்ற வழக்கு ஒன்றில் ஒன்றிய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் தமிழக காவல் துறையினருக்கு டிஜிபி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கில்தமிழக டிஜியையும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணையை ஜூலை 14 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். பெண் வழக்கறிஞரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாகக் கூறிய நீதிபதி, கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். அந்த பெண்ணை சந்திக்கும் போது, அழாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். நீதிபதியே உணர்ச்சிவசப்பட்டது, நீதிமன்ற அறையில் இருந்தவர்களை கலங்கச் செய்தது.
The post இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.