கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஜெயதேவா இதயநோய் சிகிச்சைக்கான உயர்மருத்துவமனையில் திடீரென நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். ஹசன் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அவர்கள் தங்களுக்கு இதயநோய் குறித்த பரிசோதனை மேற்கொள்ளும்படி மருத்துவர்களை வற்புறுத்தியதால், மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். ஹசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் நடுத்தர வயதைச் சேர்ந்த 22 பேர்இதயக் கோளாறால் மரணமடைந்து விட்டதாக வெளியான ஒரு அறிவிப்பின் அடிப்படையில், மக்கள் தங்களுக்கும் இதய நோய் இருக்குமோ என்ற பீதியில் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
நான்காம் வகுப்பு படிக்கும் 10 வயதேயானபள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இதயக் கோளாறு ஏற்பட்டு சரிந்துவிழுந்து உயிரிழந்தது இன்னும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் இப்படி குவிந்ததால், அவர்களுக்கு இதய பரிசோதனை நடத்தமுடியாமல் வெவ்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி மருத்துவர்கள் அவர்களை அனுப்பியுள்ளனர்.