பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வியை தழுவவில்லை. வியாழக்கிழமை அன்று பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் டெல்லி வீரர் கே.எல்.ராகுல்.
பெங்களூரு மண்ணின் மைந்தனான அவர், 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை ராகுல் விளாசி இருந்தார். டெல்லி அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஸ்டப்ஸ் உடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அது டெல்லி அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது.