ஐபிஎல் 2025 தொடர் தொடங்கி 3 போட்டிகள் முடிந்த நிலையில், பொதுவாக எழும் ஒரு சிந்தனைப் பதிவு என்னவெனில், உண்மையில் நடப்பது கிரிக்கெட்டா அல்லது ஐபிஎல் வணிக முத்திரை என்னும் பிராண்டை இன்னும் பிரபலமடையச் செய்து உலகளாவிய ஒரு பிராண்டாக மாற்றுவதா என்ற சந்தேகமே எழுகிறது.
கவி-விமர்சகர் எஸ்ரா பவுண்டு ஒரு கவிதையில் உன்னதங்களின் வீழ்ச்சியை அங்கலாய்க்கும்போது, ‘But a tawdry cheapness Shall outlast our days’ – அற்பத்தனங்களும் மலிவான ரசனையும் பண்பாடும் நம் நன்மதிப்பான நாட்களை அழித்தே விடும் என்கிறார். ஐபிஎல் என்பது இன்றைய மாஸ் மீடியா, அதன் நிகழ்ச்சிகள், அதன் வணிக நோக்கங்கள், அரசியல் கச்சடாத்தனம், சராசரிக்கும் கீழான பொதுப்புத்தியை ஊட்டி உயரியவற்றையும், உயர்ந்த ரசனைகளையும் காலி செய்யும் பல கலாச்சார சீரழிவுப் பொருட்களில் ஒன்றே என்று நம்மை எண்ண வைக்கிறது. பிக்பாஸ் போன்றதுதான் ஐபிஎல் கிரிக்கெட்டும் என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது.