ஐக்கிய நாடுகள் அவையின் உணவுப் பாதுகாப்பு – ஊட்டச்சத்து அறிக்கை ஐ.நா. துணை அமைப்புகளால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 2024இல் ஐந்து வயதுக்கும் குறைவான 18.7% குழந்தைகள் உடல் எடை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது; இது உலகிலேயே மிக அதிகமான விகிதம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் உலக உணவுப் பாதுகாப்பு – ஊட்டச்சத்து நிலை அறிக்கை, ஐந்து ஐ.நா. அமைப்புகளால் (FAO, IFAD, UNICEF, WFP, WHO) ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது. இது பசி, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறித்த தரவுகளையும், பகுப்பாய்வையும் வழங்குகிறது. சமீபத்திய அறிக்கையில், இந்தியக் குழந்தைகள் – பெண்களின் ஊட்டச்சத்து குறித்த தரவுகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன.