புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் 30 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இறங்கிய இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது 24 குண்டுகளை வீசியது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 48 மணிநேரத்தில் 2 முறை ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லை மாநிலங்களில் 30 இடங்களில் உள்ள ராணுவ மையங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று முன்தினம் 300 முதல் 400 ட்ரோன்களை அனுப்பியது. லடாக்கில் உள்ள சியாச்சின் ராணுவ முகாம் முதல், குஜராத்தில் உள்ள கட்ச் பகுதி வரை இந்த ட்ரோன்கள் பறந்து வந்தன.