சென்னை: “தமிழகம் இன்றைக்கு இந்தியாவின் மருத்துவத் தலைநகராக இருக்கிறது என்றால், அதற்கு திமுக ஆட்சிக் காலங்களில் மறைந்த முதல்வர் கருணாநிதி உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்புதான் அதற்கு காரணம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.26) சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2,642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் சரி, அதையெல்லாம் எதிர்கொண்டு தன் பணியை மேற்கொண்டு வருகின்றது திராவிட மாடல் அரசு. இங்கே 2,500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணைகளும், சட்ட நெருக்கடிகளைக் கடந்துதான் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.