மதுராந்தகம்: இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறுநீரை உரமாக மாற்றும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் பழமையான மார்வார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1956ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும், சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் தான் படித்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் சுகாதரத்தை மேம்படுத்தவும், பள்ளியில் புதியதாக தொடங்கபட்டுள்ள விவசாய பிரிவு பயிலும் மாணவர்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையிலும் மாணவர்களின் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் இந்தப் பள்ளியில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று இப்பள்ளியில் 1984 மற்றும் 1995ம் ஆண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பாக ‘‘நான் முதல்வன்’’ உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையமும் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மதுராந்தகம் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார், கல்வித்துறை அதிகாரி உதயகுமார், வருண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர் எழிலரசன், பள்ளி மேலாண்மை குழு தலைவி வடிவுக்கரசி சிவகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சித்தார்த்தர், ஆசிரியர் தணிகைவேல் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி இயந்திரம் அமைப்பு appeared first on Dinakaran.