இந்தியாவில் ஒரு நிமிடத்தில் மூன்று குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ‘இந்தியா சைல்டு புரொடெக் ஷன்’ (India Child Protection) என்னும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையில், “இந்தியாவில் ஒரு நிமிடத்தில் 3 சிறுமிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடைபெறுகின்றன; அதேநேரத்தில், குழந்தைத் திருமணம் தொடர்பாக ஒரு நாளில் 3 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகப் பதிவுகள், தேசியக் குடும்ப நல ஆய்வு ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் 45% தெற்காசியாவில் நடைபெறுகின்றன. இதில் 34% இந்தியாவில் நடப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.