புதுடெல்லி: இந்தியாவில் டெஸ்லா கார் ஆலை அமைக்க எலான் மஸ்க் போட்டுள்ள திட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முட்டுக்கட்டை போட்டுள்ளார். முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.அதிக வரி காரணமாக டெஸ்லா தயக்கம் காட்டி வருகிறது. இந்த பின்னணியில், இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்பரத்தை டெஸ்லா சமீபத்தில் வெளியிட்டுள்ளது.அதில் வணிக செயல்பாட்டு ஆய்வாளர்,வாடிக்கையாளர் சேவை பிரிவு உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பதவிகள் அனைத்தும் மும்பை புறநகர் பகுதிக்கானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கியிருப்பதன் மூலம் டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 13ம் தேதி அதிபர் டிரம்பை சந்திக்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். மோடியை சந்திப்பதற்கு முன் டிரம்ப் பேட்டியளிக்கையில்,சில அமெரிக்க பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியா விதித்த அதிக வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பரஸ்பர வரிகளை விதிக்கப்படும் என்ற தனது நோக்கத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்,‘‘உலகிலேயே அதிக வரிகளை இந்தியா வசூலிக்கிறது என்று பிரதமர் மோடியிடம் கூறினேன்.இந்தியாவில் எலான் மஸ்க் ஒரு காரை விற்பது சாத்தியமற்றது. நாட்டின் வரிகளைத் தவிர்ப்பதற்காக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையைக் கட்டினால், அது அமெரிக்காவிற்கு இழைக்கப்படும் அநீதி. ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு 100% வரி விதிக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு வரி விதிக்கிறீர்களோ, அதற்கு இணையாக நாங்களும் வரி விதிப்போம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன் ’’ என்றார்.
The post இந்தியாவில் டெஸ்லா ஆலை எலான் மஸ்க்குக்கு டிரம்ப் முட்டுக்கட்டை: அமெரிக்காவுக்கு அநீதி இழைப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.