மதுரை: இந்தியாவில் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில் 343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் ஆக்கியது ஏன்? என்று ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். 2018ம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட தங்கநகை தரகட்டுப்பாடு சட்டத்தின் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தங்க நகை விற்பனையின் போது ஹால்மார்க் முத்திரை பொறிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 803 மாவட்டங்களில் 343 மாவட்டங்களிலும், 36 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் 25 மாநிலங்களில் மட்டுமே கட்டாய ஹால் மார்கிங் நடைமுறையில் உள்ளது.
ஆனாலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால் தரமற்ற தங்க நகைகள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. எனவே தரமான தங்கநகை விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தங்கநகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரையை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்தியாவில் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில் 343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் ஆக்கியது ஏன்? என்றும் 343 மாவட்டத்தில் மட்டும் ஹால்மார்க் கட்டாயமாக்கினால் மற்ற மாவட்டத்தில் முறைகேடுகள் நடக்காதா? என்றும் ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
The post இந்தியாவில் 343 மாவட்டங்களில் மட்டும் தங்கநகை ஹால்மார்க் முத்திரை கட்டாயம் ஆக்கியது ஏன்?: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி! appeared first on Dinakaran.