இஸ்லாமாபாத்: இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், இந்திய விமானங்களுக்கு தடை என பல்வேறு உத்தரவுகளை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. முக்கிய அமைச்சர்கள் மற்றும் முப்படை தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகின்றது. இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு பாகிஸ்தான் உரிமை கொண்டுள்ளது.
* வாகா எல்லை உடனடியாக மூடப்படுகின்றது.
* சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் பாகிஸ்தான் உடனடியாக ரத்து செய்கிறது.
* சீக்கிய மத யாத்திரீகர்கள் தவிர தற்போது பாகிஸ்தானில் தங்கி இருக்கும் அனைத்து இந்தியர்களும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.
* பாகிஸ்தானில் இருக்கும் இந்திய பாதுகாப்பு படை, கடற்படை மற்றும் விமான ஆலோசகர்கள் வருகிற 30ம் தேதிக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இந்த பதவிகள் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படுகின்றது. இவர்களுக்கு ஆதரவாக பணியாற்றிய ஊழியர்கள் இந்தியா திரும்பி செல்ல வேண்டும்.
* இந்திய தூதரகத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையானது வருகிற 30ம் தேதிக்குள் 30 தூதர்கள் மற்றும் ஊழியர்களாக குறைக்கப்படும்.
* இந்தியாவுக்கு சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் வான்வெளி உடனடியாக மூடப்படுகின்றது.
* பாகிஸ்தான் வழியாக எந்தவொரு மூன்றாவது நாட்டிற்கும் மற்றும் அங்கிருந்தும் இந்தியாவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகமும் உடனடியாக நிறுத்தப்படுகின்றது.
போர் செயலாக கருதப்படும்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்ற இந்தியாவின் ஒருதலைப்பட்ச முடிவை தேசிய பாதுகாப்பு குழு திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இந்த ஒப்பந்தம் பிராந்திய ஸ்திரதன்மைக்கு இன்றியமையாதது. தண்ணீர் முக்கியமான தேசிய நலன் மற்றும் 240மில்லியன் பாகிஸ்தானியர்களின் உயிர்நாடியாகும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு சொந்தமான தண்ணீரை தடுக்கவோ, அல்லது திசைதிருப்பவோ செய்யும் எந்த ஒரு முயற்சியும் போர் செயலாக கருதப்படும் என்று தேசிய பாதுகாப்பு குழு கூறியுள்ளது.
The post இந்தியாவுடன் வர்த்தகம் நிறுத்தம், இந்தியர்கள் வெளியேற கெடு; சிம்லா ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: பாகிஸ்தான் அறிவிப்பு appeared first on Dinakaran.