ஒட்டாவோ: இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளது என்றும், அதனை தான் எதிர்நோக்குவதாகவும் கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியா – கனடா உறவுகளில் தூதரக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமராக வரவிருப்பவருமான மார்க் கார்னி, இந்தியா உடனான கனடாவின் வர்த்தக உறவை பன்முகப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையின் கீழ் இந்தியா – கனடா இருதரப்பு உறவு மோசமடைந்த நிலையில், அதனை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.