வாஷிங்டன்: இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான 50% வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய – அமெரிக்க உறவு பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியா – சீனா உறவு கூடுதல் வலிமையைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான நல்லுறவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஜேக் சல்லிவன், கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வெளியுறவுத்துறை இதழில் கூட்டாக எழுதியுள்ள கட்டுரையில், “இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இது வருந்தத்தக்கது.