சீனாவும், பாகிஸ்தானும் வர்த்தக தொடர்புகள், முதலீட்டு விவகாரங்களில் ஆழமான நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இதன்மூலம் சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை விரிவாக்கம் செய்ய வியூகம் வகுத்திருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாக இந்தியா விளக்கமளித்தது. ஆனாலும், பாகிஸ்தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், இரு நாடுகளும் மே.10-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.