வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க கருவூல பத்திரங்களில் 36.2 லட்சம் கோடி டாலர் முதலீடு செய்துள்ள நிலையில், கூடுதல் வரி விதிப்பால் அந்த நாடுகள் முதலீடுகளை திரும்ப கேட்டால் அமெரிக்க பொருளாதாரம் மூழ்கிவிடும். அந்த அச்சத்தால் ஸ்மார்ட் போன், லேப்டாப் உள்ளிட்ட 20 ெபாருட்கள் மீதான வரிகளுக்கு டிரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகத்தில் சீனாவை வீழ்த்த வேண்டும் என்ற தனது இலக்கை மீண்டும் வலியுறுத்தும் வகையில், சீனாவுக்கு மட்டும் 145 சதவீத இறக்குமதி வரியை அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 10 சதவீதம் மட்டும் இறக்குமதி வரியை விதித்தார். இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களின் மதிப்பு சரிந்ததால் கூடுதல் வரிகளை டிரம்ப் அறிவித்து வருவதாக நிதித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தவர்களில் சிலர் பத்திரங்களை விற்கத் தொடங்கியதால், அவற்றின் மதிப்பு குறைந்தது. இது டிரம்புக்கு பெரிய நெருக்கடி கொடுத்தது. கருவூலப் பத்திர முதலீடுகளின் வருமானத்தைக் கொண்டே அமெரிக்கா தனது செலவுகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் கருவூலச் செயலாளர் லாரன்ஸ் சம்மர்ஸ் கூறுகையில், ‘மற்ற நாடுகளுக்கு இறக்குமதி வரிகளைச் சுமத்தினால், அந்த நாடுகள் அமெரிக்க கருவூலத்தில் உள்ள தங்கள் பத்திர முதலீடுகளைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது. அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில் பல்வேறு நாடுகள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. ஜப்பான் 1.07 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பத்திரங்களை வாங்கியுள்ளது.
இந்தியா 22,500 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கப் பத்திரங்களில் உள்ள மொத்த முதலீடு 36.2 லட்சம் கோடி டாலர் ஆகும். அதிக இறக்குமதி வரியைச் சுமத்துவதன் மூலம், பழிவாங்கும் நடவடிக்கையாக முதலீடு செய்துள்ள நாடுகள் அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்த தொகையை ஒரே நேரத்தில் திரும்பப் பெற்றால், அமெரிக்கப் பொருளாதாரம் மூழ்கிவிடும். இதற்குப் பயந்தே, பல்வேறு நாடுகள் மீது அதிக இறக்குமதி வரியை விதித்த முடிவை டிரம்ப் திரும்பப் பெற்றார். சீனாவிற்கு எதிராக மட்டுமே அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. சீனாவிற்கு எதிராக கூடுதல் வரி விதித்தால் மட்டுமே அமெரிக்காவிற்குள் உள்ள நிறுவனங்களைக் காப்பாற்ற முடியும் என்று டிரம்ப் நம்புகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களான ஆப்பிள், சிப் உற்பத்தியாளரான என்விடியா மற்றும் தென்கொரியாவின் சாம்சங் ஆகிய நிறுவனங்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து, ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட 20 பொருட்களின் மீதான கூடுதல் இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நீக்கியுள்ளார்.
முன்னதாக பல்வேறு நாடுகள் மீதான இறக்குமதி வரிகளை டிரம்ப் கடுமையாக உயர்த்தியதைத் தொடர்ந்து, ஆப்பிள், என்விடியா, சாம்சங் போன்ற நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைக் கண்டன. இதன் காரணமாகவே இந்த நிறுவனங்கள் டிரம்புக்கு அதிக அழுத்தத்தை கொடுத்தன. அதனால் சிப் தயாரிக்கும் இயந்திரங்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், சில தொலைத்தொடர்பு உபகரணங்கள் உள்ளிட்ட 20 பொருட்களுக்கான இறக்குமதி வரியை நீக்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
அதிக இறக்குமதி வரியை விதித்தால், இந்த 20 பொருட்களுக்கும் மிகப்பெரிய அளவில் விலைவாசி உயர்வு ஏற்படும் என்று ஆப்பிள், என்விடியா, சாம்சங் ஆகிய நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன. அதனால் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 90 நாட்களில் பேச்சுவார்த்தைக்குப் பின் எந்தெந்த நாடுகள் மீது பரஸ்பர வரி நீடிக்கும் என்பது தெரியவரும். இந்நிலையில், பரஸ்பர வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், செமிகண்டக்டர் தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரங்கள், பிளாட் பேனல் மானிடர்கள் ஆகியவை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியா உள்ளிட்ட நாடுகள் 36.2 லட்சம் கோடி டாலர் முதலீடு; முதலீடுகளை திரும்ப கேட்டால் அமெரிக்க பொருளாதாரம் மூழ்கிவிடும்..? ஸ்மார்ட் போன் உட்பட 20 பொருட்களுக்கு வரி விலக்கு அறிவித்த டிரம்ப் appeared first on Dinakaran.