வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% வரி உறுதியாக விதிக்கப்படும். பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை அழிக்கப் பார்க்கின்றனர் என்று டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பதவிக் காலத்தில் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் கீழ், பல்வேறு நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 12 முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது 25% வரை வரி விதிக்கப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். பின்னர், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார்.
தற்போது அந்த அவகாசம் முடியவிருக்கும் நிலையில், ‘வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த நாடுகள் மீது வரி விதிக்கப்படும்’ என்று நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இவரது இந்த அறிவிப்பு, உலகளாவிய வர்த்தகச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான இந்த சூழலுக்கு மத்தியில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆறு புதிய உறுப்பு நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மீது அதிபர் டிரம்ப் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பானது, அமெரிக்க நலன்களுக்கு விரோதமாகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் மீது விரைவில் 10% வரி விதிக்கப்படும்’ என்றார்.
இந்நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பே அமெரிக்காவைப் பாதிக்கும் நோக்கில்தான் உருவாக்கப்பட்டது. அமெரிக்க டாலரின் மதிப்பைச் சிதைத்து, உலகளாவிய தரநிலையிலிருந்து டாலரின் மதிப்பை வெளியேற்றுவதை அவர்களின் நோக்கமாகும். அவர்கள் (பிரிக்ஸ் நாடுகள்) அந்த விளையாட்டை ஆட விரும்பினால், என்னாலும் பதிலடி விளையாட்டை ஆட முடியும். பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை அழிக்க முயற்சிக்கின்றன. வேறொரு நாட்டின் நாணயத்தை உலகத் தரநிலையாக மாற்ற முயற்சிக்கின்றன. உலகளாவிய தரநிலையிலிருந்து டாலரின் மதிப்பை அமெரிக்கா இழந்தால், உலகப் போரில் அமெரிக்கா தோற்பதற்குச் சமம். அதை நடக்கவிட முடியாது.
கடந்த அதிபரைப் போல ஒரு முட்டாள் இருந்தால் மட்டுமே நாம் நம்முடைய சக்தியை இழப்போம். டாலரின் இடத்திற்கு சவால் விடும் எவரும் அதற்காக பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த விலையைக் கொடுக்க அவர்கள் தயாராக இருப்பார்களா என்பது தெரியவில்லை’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அதிபர் டிரம்பின் இந்த திடீர் அறிவிப்பு, உலகப் பொருளாதாரத்தில் புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறினர்.
The post இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% வரி உறுதி; அமெரிக்க டாலர் மதிப்பை அழிக்க பார்க்கிறீர்களா?… டொனால்ட் டிரம்ப் ஆவேசம் appeared first on Dinakaran.