லடாக் தொடர்பில் இந்தியா சீனா இடையில் நிலவும் சிக்கல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இரண்டு உயர் அமெரிக்க அதிகாரிகள் பேசியிருந்தனர். இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியது. அமெரிக்காவின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்வோம்.
சென்ற புதன்கிழமை, அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் கமாண்டிங் ஜெனரல் சார்லஸ் ஏ ஃப்ளைன், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக்கில் சீனாவின் செயல்பாடு குறித்துப் பேசினார்.
“ராணுவ நடவடிக்கைகளின் நிலை கண்களைத் திறப்பதாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். சீனா மேற்கு தியேட்டர் கமாண்டில் சில உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது எச்சரிக்கையை தூண்டுவதாக உள்ளது,” என்று ஃபிளைன் குறிப்பிட்டார்.