புதுடெல்லி: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சழூல், வேளாண், விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் தொடர்ச்சியாக, இரு தலைவர்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பிரதமர் மோடி, "பயங்கரவாதத்துக்கு எதிராக நாங்கள் இருவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். நியூசிலாந்தில் மார்ச் 15, 2019 அன்று நிகழ்ந்த கிறைஸ்ட் சர்ச் பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் சரி, நவம்பர் 26, 2008 அன்று நடந்த மும்பை தாக்குதலாக இருந்தாலும் சரி, எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை அவசியம். பயங்கரவாத, பிரிவினைவாத மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக எங்களின் தொடர் ஒத்துழைப்பு இருக்கும்.