இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராணுவரீதியாக பதிலடி கொடுப்பதற்கு ஏற்ப இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார். இவ்விவகாரத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணைக்குத் தயார் என ஏற்கனவே தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த விசாரணையில் இணைய சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் பஹல்காம் திவிராவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து 2வது முறையாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொலைபேசி மூலம் உரையாடினார்.
துதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில், “பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உடன் திங்கள்கிழமை அன்று தெற்காசியாவில் நிலவும் போர் பதற்ற சூழ்நிலை குறித்து விவாதித்தார். ஒரு வாரத்திற்குள் இரு தலைவர்களுக்கும் இடையேயான இரண்டாவது தொலைபேசி உரையாடல் ஆகும். ஐ.நா. பொதுச்செயலாளரின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தொடர்பு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் ஷெரீப், பதற்ற சூழ்நிலையை தணிப்பதும், மோதலையும் தவிர்ப்பதும் அவசியம் என தெரிவித்தார்.
சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணையை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்தியா இன்னும் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும், தொடர்ந்து ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் மற்றும் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் உறுதியை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் பொருளாதார நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்வதேச நிதி நிறுவனங்களை அரசியலாக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் ஷெரீப் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தினார். தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தனது முயற்சிகள் குறித்து பிரதமரிடம், ஐநா பொதுச் செயலாளர் விளக்கினார். மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்கு பிறகு நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும்: ஐநா பொதுச் செயலாளரிடம் பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள் appeared first on Dinakaran.