நியூயார்க்: இந்தியா – பாகிஸ்தான் பதற்றங்கள் தொடர்பாக விவாதிக்க இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் கூடுகிறது. அப்போது பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் அணு ஆயுதம் படைத்த தெற்காசிய நாடுகள் என்பதால், இவ்விவகாரத்தில் உலக நாடுகள் கவலையடைந்துள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) பொறுப்பேற்றுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. மாறாக, சர்வதேச அளவிலான நடுநிலையான விசாரணையை கோரியுள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை ஐ.நா மன்றத்தில் பாகிஸ்தானில் புகாராக தெரிவிக்கப்பட்டது. இந்த மாதத்திற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு கிரீஸ் தலைமை வகிக்கிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இன்று பிற்பகல் கூடுகிறது.
அப்போது இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனால் இன்று பிற்பகல் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து மூடிய அறையில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் 15 உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. அப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்தும், இந்தியாவின் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் குறித்தும் பாதுகாப்பு கவுன்சில் விவாதிக்கும். முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற 8 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேசி, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மற்றும் கிரீஸ் தூதர் எவாஞ்சலோஸ் செகரிசுடனும் ஆலோசனைகள் நடத்தினார். அதேநேரம் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியா – பாகிஸ்தான் பதற்றங்கள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டம்: பஹல்காம் தாக்குதல் குறித்து முக்கிய விவாதம் appeared first on Dinakaran.