இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியும் கூட எனக்கு நோபல் பரிசு கிடைக்கப்போவதில்லை என்று அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் புலம்பி இருக்கிறார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், அமெரிக்கா அதிபர் டிரம்பை இந்த வாரம் சந்தித்து பேசினார். முனிரூக்கு டிரம்ப் விருந்து வைத்தார். மேலும் அவரை அதிபர் டிரம்ப் வெகுவாக புகழ்ந்திருந்தார். இந்நிலையில் அதிபர் டிரம்புக்கு 2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசு பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், ‘‘காங்கோவுக்கும் ருவாண்டாவிற்கும் இடையே ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது எந்த ஒரு முயற்சிக்கும் நோபல் பரிசு கிடைக்காது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியாவிற்கும், கொசோவோவிற்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல் -ஈரான் மோதல்களை நிறுத்துவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கப்போவதில்லை. நான் தலையிட்டதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் மக்களுக்கு அது தெரியும். அது தான் எனக்கு முக்கியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உளவுத்துறை இயக்குனர் கருத்துக்கு மறுப்பு
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தனது தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் கூறியது தவறு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் டிரம்ப், சாத்தியமான போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவது மிகவும் கடினமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான்
அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று,’’2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் அரசு அதிபர் டிரம்பை பரிந்துரைத்தது’’ என்ற தலைப்பில் பதிவு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த பதிவில்,’சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியின்போது அவரது தீர்க்கமான ராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக 2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்பை முறையாக பரிந்துரைப்பதற்கு பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தியா-பாக். போரை நிறுத்தியும் கூட எனக்கு நோபல் பரிசு கிடைக்காது: அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பல் appeared first on Dinakaran.