வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா ‘லாபம் தேடும் திட்டத்தை’ நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றம் சாட்டினார். மேலும், இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நவரோ, “பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கவில்லை. இந்தியா அப்போது தனது தேவையில் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் மட்டும் ரஷ்யாவிலிருந்து வாங்கியது. ஆனால், அது இப்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு எண்ணெய் தேவையில்லை. இது ஒரு லாபப் பகிர்வுத் திட்டம். இது ரஷ்யாவுக்கு பணத்தை மாற்றும் ஒரு சலவைத் தொழிற்சாலை போல செயல்படுகிறது என்பதுதான் உண்மை.